
1953 ஆம் ஆண்டு இராமசாமி குப்பம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் திரு.கயல் பரதவன் அவர்கள். அவருடைய சொந்த ஊர் இடைப்பாடி. அது சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்று. கயல் பரதவன் பிறந்தபோது இடைப்பாடி பேரூராட்சியாக இருந்தது. இடைப்பாடி முழுவதுமே வளப்பமான பிரதேசம் என்று சொல்ல முடியாது. அங்கே கரம்பு நிலமும், களர் நிலமும், செம்மண் பூமியும், களிமண் பூமியும் உண்டு. 13 கி.மீ. தொலைவில் காவிரி பாய்கிறது.
இடைப்பாடியின் வடக்கே “மூக்கரைப் பெருமாள்” என்று எல்லோராலும் அழைக்கப்படும் பெருமாள் கோயில் ஒன்று உண்டு. அதைத்தாண்டிச் சென்றால் 2 கல் தொலைவில் ஆவணியூர் என்ற கிராமத்தில் ஒரு மண்கோட்டை இருந்தது. இரண்டுமே சரித்திரப் பின்னணி உடையவை. கயல்பரதவன் இடைப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பை படித்து முடித்தார். பின்னர் திருவையாறு அரசர் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து புலவர் பட்டம் பெற்றார். பிறகு குமாரபாளையம் அரசினர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சியை முடித்தார்.
1974 ஆம் ஆண்டு தமிழாசிரியர் பணியில் சேர்ந்தார். பள்ளியில் பணிபுரிந்து கொண்டே பி.லிட், எம்.ஏ,பி.எட், சி.ஜே.எம்.சி, டி.லே.லா ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றார். 2005 இல் தலைமையாசிரியர், 2009 இல் மாவட்டக் கல்வி அலுவலர், 2010 இல் முதன்மைக் கல்வி அலுவலர் என்று படிப்படியாக உயர்ந்து 2011 செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.
1990 இல் தன்னுடைய முதல் நாவலான பல்லவப் பேரழகியையும், இரண்டாவது நாவலான சந்திரபானுவையும் எழுதி ஜராசந்தன் என்ற பெயரில் போட்டிகளுக்கு அனுப்பி வைத்தார். பிறகு 1997இல் சந்திரமதி, நீலவல்லி, மரகதப்பாவை போன்ற சிறிய நாவல்களை எழுதினார். அவை ஸ்டார் நாவல் என்ற இதழில் பரதவன் என்ற பெயரில் வெளிவந்தன.
2001 இல் காஞ்சிப் பாவையும் 2002இல் நீலகேசியும் வெளியிடப்பட்டன. 2006 முதல் 2009வரை பாக்யாவில் பல்லவப் பேரழகி தொடராக வந்தது. 2011 இல் ஓய்வு பெற்ற பிறகு போதிதர்மா என்ற நாவல் எழுதப்பட்டது. அது நான்கு பாகங்களாக 2018 ஜனவரியில் விற்பனைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வேறு சில நாவல்கள் வெளி வர உள்ளன. கயல் பரதவன் அவர்களின் பணி மேன்மேலும் தொடரும்.