சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ் கல்வித்துறையோடு தொடர்பு கொண்ட நான்கு நண்பர்களால் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பெயரைச் சூட்டியவர் பங்குதாரர்களில் மூத்தவரான திருவாளர் பழனிசாமி அவர்கள். பங்குதாரர்களில் ஒருவரான திருவாளர் துரைசாமி அவர்களின் முகவரியில் நிறுவனம் தொடங்கப்பட்டது. நிறுவனத்தை தொடங்கும் வேலையை நண்பரும் பட்டயக் கணக்காளருமான திருவாளர் எல்.லோகநாதன் அவர்கள் ஏற்று செவ்வனே முடித்துத் தந்தார். நல்ல இலக்கிய நூல்களை வெளியிடுவது, மாணவர்களுக்கான கையேடுகள் வெளியிடுவது, இலக்கியப் பணிகளில் ஈடுபடுவது என்று சக்திமலர் பப்ளிகேஷன்ஸ்காக பல இலக்குகள் உள்ளன. இருந்த போதும் இப்போது தரமான நூல்களை வெளியிடும் பணியை மட்டுமே செய்கிறோம். இது ஒரு நீண்ட பயணம். பங்குதாரர்கள் பழுத்த அனுபவசாலிகள். தளராத முயற்சி உடையவர்கள். அவர்களுடைய வழிகாட்டுதலில் சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ் பல வெற்றிச் சிகரங்களைத் தொடும் என்பதை மகிழ்வோடு குறிப்பிட விரும்புகிறோம்.

1953 ஆம் ஆண்டு இராமசாமி குப்பம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் திரு.கயல் பரதவன் அவர்கள்.
அவருடைய சொந்த ஊர் இடைப்பாடி. அது சேலம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் ஒன்று. கயல் பரதவன் பிறந்தபோது இடைப்பாடி பேரூராட்சியாக இருந்தது. இடைப்பாடி முழுவதுமே வளப்பமான பிரதேசம் என்று சொல்ல முடியாது. அங்கே கரம்பு நிலமும், களர் நிலமும், செம்மண் பூமியும், களிமண் பூமியும் உண்டு. 13 கி.மீ. தொலைவில் காவிரி பாய்கிறது. இடைப்பாடியின் வடக்கே “மூக்கரைப் பெருமாள்” என்று எல்லோராலும் அழைக்கப்படும் பெருமாள் கோயில் ஒன்று உண்டு. அதைத்தாண்டிச் சென்றால் 2 கல் தொலைவில் ஆவணியூர் என்ற கிராமத்தில் ஒரு மண்கோட்டை இருந்தது.
உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் போதிதர்மா வரலாற்றுப் புத்தகத்தின் படைப்பாளி, பள்ளிக் கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றபின் தவமாய் தவமிருந்து இந்நூலைப் படைத்திருக்கிறார். ஒவ்வொன்றும் சுமார் 700 பக்கங்கள் 1,2,3 என்று 4 தொகுதிகளையும் (இதில் ஒரு தொகுதி 900 பக்கம்) ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து என் இரு கைகளில் கொடுத்த போது மிரண்டு போனேன்.
“காஞ்சியின் காளி கோயில்” முதல் தலைப்பில் துவங்கி 72ஆம் தலைப்பான “வெற்றியும் பரிசும்” வரை, சரித்திர நாவல் குதிரைப் பயணமாக குதித்து ஓடுகிறது புதினத்தில் பல வரலாற்று உண்மைகள் புள்ளிகளாகத் தெரிகின்றன. புராணச் செய்திகளும் கிள்ளி வைக்கப்பட்டுள்ளன. மாலினி தேவியிடம், ஆதித்தன் துர்வாசரிடம் சாபம் பெற்ற துவார பாலகர்கள் முடிவைப் பற்றிக் கூறும் இடம், தங்க நகையில் வைரம் பதித்தது போல் ஒளி வீசுகிறது. திருமாலை வழிபட்டு பல பிறவிகள் எடுப்பதை விட அவரை எதிர்த்து ஏழு பிறவிகளில் முக்தி அடைந்து விடலாம் என்பதை ஆதித்தன் உதாரணமாகக் கூறுகிறான். வரலாற்றுப் புதினம் இது. படிப்பவர் மனதை மயிலிறகால் வருடுகிறது.
நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே சூடு பிடித்து விடுகிறது. கதை முடியும் போது, சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. சரித்திரத்தில் உண்மையில் ஜீவித்திருந்தவர்களோடு, கற்பனைப் பாத்திரங்களையும் சேர்த்து இந்த உன்னத சரித்திர நாவலைப் படைத்து இருக்கிறார் கயல் பரதவன். படித்து மகிழுங்கள்.
காஞ்சியின் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பௌத்த சந்நியாசியாகப் பேர் பெற்றதுடன் ஜென் பௌத்தத்தையும், குங்பூ என்கிற தற்காப்புக் கலையையும் உலகுக்குக் கற்றுத் தந்த, தமிழராகக் கருதப்படும் போதிதர்மரின் காலகட்ட அரசியலை விவரிக்கும் நாவல்
போதிதர்மாவைப் பற்றிய இந்த மகத்தான சரித்திர நாவல், நான்கு பாகங்களைக் கொண்டது. முடிச்சுக்கு மேல் முடிச்சாகப் போட்டு, ஒரு துப்பறியும் கதையைப் போல் இந்த சரித்திர நாவலை வளர்த்துச் சென்று இறுதி அத்தியாயங்களில் ஆசிரியர் முடிச்சை அவிழ்த்து, புதிரை விடுவிப்பது அருமை